×

பொருள் பயன்பாட்டுக் கோளாறு (Substance Use Disorder)

நன்றி குங்குமம் தோழி

புகைப்பழக்கம், மது அருந்துதல், போதைப் பொருட்களை உபயோகப்படுத்துதல் போன்ற பழக்கங்கள் எல்லாமே பொருள் பயன்பாட்டுக் கோளாறாக (Substance Use Disorder)வரையறுக்கப்படுகிறது. பொதுவாகவே பதின்பருவ தொடக்கத்தில் உள்ளவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வெளி உலக வெளிப்பாடு (Exposure) அதிகமாகிறது. குழந்தைப்பருவத்தைக் கடந்து பதின்பருவத்தை அடையும்போது தங்களுக்கென்று நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

அந்த நட்பு வட்டத்தில் தன்னை ஒரு கதாநாயகனாக காண்பித்துக் கொள்ளவும், சகாக்களின் வற்புறுத்தலுக்காகவும், ஒரு டிரெண்ட்டுக்காகவும் புகை,மது அருந்துதல், போதைப் பொருள் பயன்படுத்துவது என கொஞ்சமாக ஆரம்பித்து, அதுவே தொடர்ச்சியாகி அவற்றுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். பொருள்பயன்பாட்டுக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

பொருள் பயன்பாட்டுக் கோளாறு என்றால் என்ன?

பொருள் பயன்பாட்டுக் கோளாறு என்பது ஒரு மனநிலை. புகைபிடிப்பது, மது அருந்துதல், கஞ்சா, ஹெராயின், தற்போது போதை ஊசி, மாத்திரைகள் எல்லாம் வந்துவிட்டன. சட்டத்திற்குப் புறம்பான இவற்றை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதை பொருள் பயன்பாட்டுக் கோளாறு என்கிறோம். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது இளைஞர்கள் போதைப் பொருட்கள் மற்றும் மதுவை ஆரோக்கியமற்ற வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பொருட்களுக்கு அடிமையாதல், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவற்றைப் பயன்படுத்துதல் மற்றும் இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்தான விஷயங்களைச் செய்வது ஆகியவை பொருள் பயன்பாட்டுக் கோளாறில் அடங்கும். இந்தக் கோளாறு உள்ள குழந்தைகள் போதைப்பொருள் அல்லது மதுவை பயன்படுத்துவதால் பள்ளி, வேலை அல்லது உறவுகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் இவற்றுக்கு சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்கின்றனர். அதாவது அவர்கள் போதையை அதிகம் உணர்வதற்காக மேலும், மேலும் அதிகமாக அவற்றை பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.

பொருள் பயன்பாட்டுக் கோளாறு ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது?

கலாச்சார மாற்றம், பெற்றோர்களின் தீய பழக்கத்தைப் பார்த்து அதை அப்படியே தானும் நகலாக செய்ய முற்படுவது மற்றும் சக தோழர்களின் வற்புறுத்தல் அல்லது ஒரு சாதனையாளராக தன்னை காட்டிக் கொள்ளவும், விளையாட்டாக ஆரம்பித்து ஒருவர் இத்தகைய பழக்கத்திற்கு அடிமையாகலாம். சிகரெட், மது, கஞ்சாவைப் பற்றிப் பலர் சொல்லி, பல வகைகளில் கேள்விப்படும் தகவல்கள், பார்க்கும் நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள், சினிமா ஹீரோக்கள், நண்பர்கள் என மற்றவர்களைப் பார்த்து அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தானாகவே நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், கொண்டாட்ட நிகழ்வுகளின் போதும் விரும்பி ஈர்க்கப்படுகிறார்கள். குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக மகிழ்ச்சிக்காக போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். தங்களின் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். மனஅழுத்தம், மனநலப்பிரச்னைகள் காரணமாகவும் பொருள் பயன்பாட்டுக் கோளாறு வரலாம்.

* பள்ளி/ கல்லூரிக்கு செல்வதற்கு முன் அல்லது பள்ளி/கல்லூரி நேரம் முடிந்தபின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது
* போதைப் பொருட்களை விற்பனை செய்வது
* தங்களுடைய அறையில் இவற்றை மறைத்து வைத்திருப்பது
* பள்ளி/கல்லூரியை அதிகம் புறக்கணிப்பது
* பள்ளி/ கல்லூரியில் முன்பைவிட மோசமான செயல்திறன் உடையவர்களாக இருப்பது
* முன்பு ரசித்த செயல்களைச் செய்வதில்லை
* பழைய நல்ல நண்பர்களை தவிர்ப்பது
* சண்டையிடுவது அல்லது போதையில் வேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற ஆபத்தான நடத்தை
* போதைப் பொருளுக்கு அதிகமான ஏக்கம்
*அந்தப் பொருள் கிடைக்காத போது திரும்பப் பெறுதல் அறிகுறிகள்.

பல பதின் பருவத்தினர் தங்கள் மது அல்லது போதைப் பொருள் பயன்பாட்டை பெற்றோரிடமிருந்து மறைப்பதில் வல்லவர்கள். எனவே முதல் அறிகுறி பெரும்பாலும் பள்ளி/ கல்லூரியைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை மாற்றுவது போன்றவையாகும்.

மனிதர்கள் எல்லோருமே தங்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்யத்தான் ஆசைப்படுவார்கள். போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தெரியாததால் இன்றைக்கு பள்ளி சிறார்களுக்குக் கூட விருப்பமான ஒன்றாகிவிட்டது. போதைப் பொருட்களை உற்சாகம் தருபவையாகவும், களைப்பையும், உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக நினைத்து அதனிடம் கட்டுண்டு கிடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். இது போன்ற உட்புற, வெளிப்புற தூண்டுதல்களால் போதைப்பழக்கம் சிறுவர்களையும் பதின் பருவத்தினரையும் பற்றிக் கொள்கிறது.

பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் எது?

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். பொய் காரணங்களைச் சொல்லி பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை திருட ஆரம்பிப்பார்கள். வீட்டில் இருக்கும் பணம் அடிக்கடி திருடு போவது, தேவைக்கு அதிகமாக குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் பெற்றோர் விழித்துக் கொள்வது நல்லது.போதைப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகளின் நடத்தை மற்றும் முகமே அவர்களை காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள் மற்றும் பற்கள் கறைபடிந்து காணப்படும். அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள். மேலும், எப்போதும் தனிமையை விரும்புவார்கள். இதுபோன்ற மாற்றங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் அவர்களை கண்காணிக்க வேண்டும்.

பெற்றோரிடம் நன்றாக சிரித்து பேசி பழகிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரென சரியாக பேசாமல், விளையாடாமல் இருந்தால் அவர்களின் பிரச்னையை அறிய முயல வேண்டும். பிள்ளைகளிடம் போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தால், அவர்களைத் திட்டுவது, அடிப்பது, குற்றம் சாட்டுவது என அவர்களுக்கு வெறுப்பூட்டும் செயல்களைச் செய்யாமல், அந்தப் பழக்கத்திலிருந்து அவர்கள் வெளிவர உதவ வேண்டும். அக்கறையுடன் அதனால் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். அதை அவர்களே உணரும் வகையில் புரிய வைக்க வேண்டும்.

பிள்ளைகளின் பள்ளி / கல்லூரிக்குச் சென்று அவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்களா, சக மாணவர்களுடன் அடி தடி சண்டை போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு அவர்களை விரைவாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்க முடியும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

பெற்றோர் செய்ய வேண்டியவை…

பெற்றோர்கள்தாம் பிள்ளைகளுக்கு ரோல்மாடல். அவர்களுக்கு முன்பாக சிகரெட் பிடிப்பது, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசவும், சிரித்து விளையாடவும் அதற்கான நேரத்தைச் செலவிடவேண்டும். கல்வி நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது, குழந்தைகள் முன்பாக பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்றவை அவர்களின் மனதை பாதிக்கும் செயல்கள். இதனால் அவர்கள் தவறான நண்பர்கள் சேர்க்கையை நாடி போதைப் பழக்கத்துக்கு ஆளாகலாம்.

மாறாக பெற்றோர்கள் பிள்ளைகளின் வேறு விருப்பங்களை தெரிந்து கொண்டு அதில் அவர்களை ஈடுபடச் செய்வதன் மூலம் அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்யலாம். இசை, ஓவியம், விளையாட்டு, இவற்றில் எதில் அவர்கள் ஆர்வம் காண்பிக்கிறார்களோ அவற்றை கற்றுக் கொடுக்கலாம்.பெரும்பாலும் இன்றைய பெற்றோர்கள் தங்கள் அலுவலகம் முடிந்தபின்பும், மொபைல், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கிவிடுவதால் தங்கள் பிள்ளைகளின் போக்கை உற்றுக் கவனிக்கும் போக்கு மாறிவிட்டது.

பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், அதில் ஏற்படும் மாற்றம், நண்பர்கள் வட்டம், அவர்களின் பழக்கங்கள் போன்றவற்றை பெற்றோர் கூர்ந்து கவனித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.நிலைமை கைமீறும் நேரத்தில், பிள்ளைகளை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல பெற்றோர் தயக்கம் காட்டவே கூடாது.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post பொருள் பயன்பாட்டுக் கோளாறு (Substance Use Disorder) appeared first on Dinakaran.

Tags : Doshi ,Dinakaran ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!